ஒரு சின்ன விளக்கை பால்கனியிலிருந்த துளசிக்கு அருகே அம்மா வைக்கிறார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாலையும் அம்மா அதை செய்வார். இப்போது 70 வயதை கடந்த பிறகு, பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு கைகளும் கால்களும் நடுங்க, மனம் மாயைகளில் சிக்கி தவிக்கும் நிலையில் அவரது விளக்கு கறுப்பாக இருப்பதாக அம்மா நினைக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எல்லா பால்கனிகளிலும் தீபாவளிக்கு விளக்குகள் ஒளிர்கின்றன. இன்று தீபாவளியா, என்று கேட்கிறார். அவரது நினைவை இனி நம்ப முடியாது. இப்போது மீண்டும் எல்லாம் இருட்டாக இருக்கிறது, முன்பை விட இருட்டாக. மிகவும் பழகிய ஒலி கேட்கிறது. காயத்திரி மந்திரம் போல சில இருக்கிறது. அல்லது ஹனுமன் சாலிசாவா? யாராவது ‘பாகிஸ்தான் ஒழிக’ என்று இப்போது சொன்னார்களா?

நட்சத்திரங்களற்ற ஆகாயத்தை பார்த்து அவர் நடுங்குகிறார். திடீரென்று அவரது தலையில் பல குரல்கள் கேட்கின்றன, அவரை பித்துநிலைக்கு துரத்தும் குரல்கள். கெட்டுப்போன ரொட்டியை விற்கும் இஸ்லாமியர்கள் பற்றி எச்சரிக்கும் குரல்கள். கொரொனாவை பரப்புவதற்காக எச்சில் துப்பும் இஸ்லாமிய காய்கறி விற்பனையாளரை புறக்கணிக்கச் சொல்லும் குரல்கள். ஒற்றுமையின் விளக்கை ஏற்றச் சொல்லும் குரல்கள். திக்கில்லாமல் சாலைகளில் திரியும் பசித்த வயிறுகளின் குரல்கள். அன்பையும் கருணையையும் போதிக்கும் மங்கிய குரல்கள். அவரது விளக்கை அணைக்கும் இருண்ட காற்றின் குரல்கள். அவருக்கு தலை சுற்றுகிறது, தனது படுக்கைக்கு போக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் நடந்து செல்லும் அளவுக்கு வெளிச்சம் இல்லை. நடுங்கும் தனது விரல்களுக்கிடையில் விளக்கை பற்றிக்கொள்ள போராடுகிறார், மீண்டும் ஒரு முறை.

சுதனவா தேஷ்பாண்டேவின் குரலில் இந்த கவிதையை கேளுங்கள்

PHOTO • Rahul M.

இருண்ட விளக்கு

நான் ஒரு சின்ன விளக்கைதான் ஏற்றி வைத்தேன்,

பிறகு இருண்டுவிட்டது!

அது எப்படி?

இப்போது வரையில் அது எப்படி

மறைந்து கொண்டிருந்தது,

வீட்டின் ஒரு மூலையில்,

இப்போது என் கண் முன்னாலும்

எங்கும்

அது தாண்டவமாடுகிறது!

அதை நான் மிரட்டல்களோடும்

எச்சரிக்கைகளோடும்

அடித்தளத்தில்

ஒளித்து வைத்திருந்தேன்.
அது சதி செய்வதை தடுக்க

வெட்கப்படும்படியாக

அதன் தலையில்

இரும்பு சுமைகளையும்

ஏற்றி வைத்திருந்தேன்.

அதன் வாயை அடைத்திருந்தேன்.

அதன் முகத்தில் அறைந்து

கதவை மூடியதும்

நினைவு இருக்கிறது.
அது எப்படி தப்பித்தது?

அதன் தடைகள் என்ன ஆனது?

வெட்கமில்லாமல் நிர்வாணமாக

இந்த இருள் எப்படி அலைகிறது?

அன்பின் சிறிய வெளிச்சக்கதிர்களுள்

புகுந்து

அது எப்படி எல்லா ஒளியையும்

இருட்டாக, கறுப்பாக,

ரத்தம் சிந்தும் வன்மம் புனைந்த

நஞ்சேறிய சிவப்பாக

மாற்றுகிறது?

ஒளி, ஒரு காலத்தில்

வெளிச்சம் பரப்பிய இதமான மஞ்சள் ஒளி.

அதன் தலையிருந்து

சுமையை யார் அகற்றினார்கள்?

கதவை யார் திறந்தார்கள்?

நாக்கை வெளிநீட்டும் வகையில்

துணியை யார் எடுத்தார்கள்?

யார் அறிவார்?

ஒரு விளக்கை ஏற்றுவதென்பது

இருளை பரப்புவதென்று.


குஜராத்தியில் எழுதிய கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், கவிஞர்.

குரல்: சுதனவா தேஷ்பாண்டே, ஜன நாட்ய மஞ்சை சேர்ந்த நடிகர் மற்றும் இயக்குனர். லெப்ட்வர்ட் பதிப்பகத்தின் ஆசிரியர்.

புகைப்படங்கள் ராகுல்: எம்.

தமிழில்: ராஜசங்கீதன்

Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Translator : Kavitha Muralidharan

Kavitha Muralidharan is a Chennai-based independent journalist and translator. She was earlier the editor of 'India Today' (Tamil) and prior to that headed the reporting section of 'The Hindu' (Tamil). She is a PARI volunteer.

Other stories by Kavitha Muralidharan