தனது படிப்புக்கு உதவும் என்று ஸ்மார்ட் ஃபோன் வாங்க விரும்பினார் 18 வயது மாணவியான  ஜஸ்தீப் கௌர். இதற்காக அவருக்கு ரூ.10 ஆயிரம் கடனாகக் கொடுத்தார்கள் அவரது பெற்றோர். இந்தக் கடனை அடைப்பதற்காக, 2023-ம் ஆண்டு கோடை விடுமுறையில் நடவு வேலை செய்தார் ஜஸ்தீப்.

பஞ்சாபில் முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில், தங்கள் குடும்பத்துக்கு உதவி செய்வதற்காக ஏராளமான தலித் மாணவர்கள் விவசாய வேலை செய்கிறார்கள்.

“மகிழ்ச்சிக்காக நாங்கள் நிலத்தில் வேலை செய்யவில்லை. எங்கள் குடும்பத்துக்கு வேறு வழியில்லை என்பதால் வேலை செய்கிறோம்,” என்கிறார் ஜஸ்தீப். அவர் பஞ்சாபில் பட்டியல் சமூகமான மசாபி சீக்கியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த சமூகத்தில் பெரும்பாலான மக்களுக்கு நிலம் இல்லை. அவர்கள் ஆதிக்க சாதி விவசாயிகளின் நிலங்களில் வேலை செய்கிறார்கள்.

ஒரு பசுமாடு வாங்குவதற்காக, ஒரு நுண் நிதி நிறுவனத்தில் பெற்ற 38 ஆயிரம் ரூபாய் கடனில் இருந்துதான் ஜஸ்தீப் ஸ்மார்ட் போன் வாங்க கடன் கொடுத்தார்கள் அவரது பெற்றோர். பால் ஒரு லிட்டர் ரூ.40 வரையில் விற்கும். அந்தப் பணம் வீட்டுச் செலவுக்கு உதவுகிறது. முக்த்சர் மாவட்டத்தில் உள்ள அவர்களுடைய ஊரான குந்தே ஹலால் கிராமத்தில் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்த ஊரில் 33 சதவீத மக்கள் விவசாயத் தொழிலாளர்கள்.

ஜூன் மாதம் ஜஸ்தீப் கல்லூரித் தேர்வு எழுதியபோது ஸ்மார்ட் ஃபோன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது இடையில் இரண்டு மணி நேரம் இடைவெளி எடுத்து, ஆன்லைனிலேயே அந்த தேர்வை முடித்தார் அவர். “வேலையை விட்டுவிட்டு என்னால் போக முடியாது. நான் கல்லூரிக்குப் போயிருந்தால், அன்றைய தேதியில் என்னுடைய கூலி குறைக்கப்பட்டிருக்கும்,” என்கிறார் ஜஸ்தீப்.

Dalit student Jasdeep Kaur, a resident of Khunde Halal in Punjab, transplanting paddy during the holidays. This summer, she had to repay a loan of Rs. 10,000 to her parents which she had taken to buy a smartphone to help with college work
PHOTO • Sanskriti Talwar

தனது விடுமுறைக் காலத்தில் நெல் நடவு செய்யும் வேலையில் ஈடுபடுகிறார் பஞ்சாபின் குந்தே ஹலால் கிராமத்தைச் சேர்ந்த தலித் மாணவி ஜஸ்தீப் கௌர்

'We don’t labour in the fields out of joy, but out of the helplessness of our families ,' says Jasdeep. Her family are Mazhabi Sikhs, listed as Scheduled Caste in Punjab; most people in her community do not own land but work in the fields of upper caste farmers
PHOTO • Sanskriti Talwar
'We don’t labour in the fields out of joy, but out of the helplessness of our families ,' says Jasdeep. Her family are Mazhabi Sikhs, listed as Scheduled Caste in Punjab; most people in her community do not own land but work in the fields of upper caste farmers
PHOTO • Sanskriti Talwar

நாங்கள் மகிழ்ச்சிக்காக நிலத்தில் வேலை செய்யவில்லை. எங்கள் குடும்பங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் செய்கிறோம்,’என்கிறார் ஜஸ்தீப். பஞ்சாபில் பட்டியல் சமூகமான மசாபி சீக்கியர் சமூகத்தைச் சேர்ந்தவர் அவர். அந்த சமூகத்தில் பெரும்பாலான மக்களுக்கு நிலம் இல்லை. அவர்கள் ஆதிக்க சாதி விவசாயிகளின் நிலங்களில் வேலை செய்கிறார்கள்

பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சார் மாவட்ட முக்த்சார் அரசுக் கல்லூரியில் இரண்டாமாண்டு வணிகவியல் படிக்கும் ஜஸ்தீப்புக்கு விவசாய வேலை ஒன்றும் புதியதில்லை. தனது 15 வயதில் இருந்தே குடும்பத்தோடு சேர்ந்து நிலத்தில் உழைத்துக்கொண்டிருக்கிறார் அவர்.

“மற்ற குழந்தைகள் கோடை விடுமுறையின்போது பாட்டி வீட்டுக்குப் போகவேண்டும் என்று கேட்பார்கள். நாங்கள், கூடுமானவரை அதிகமான நாற்றுகளை நட்டுவிடவேண்டும் என்று முயற்சி செய்வோம்,” என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் ஜஸ்தீப்.

ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு, ஒரு நுண் கடன் நிறுவனத்திடம் தன் குடும்பம் வாங்கியிருந்த இரண்டு கடன்களை அடைப்பதற்கு உதவி செய்யவேண்டும் என்பதற்காகவே நாற்று நடும் வேலைக்கு வந்தார் ஜஸ்தீப். 2019-ம் ஆண்டு அவரது தந்தை ஜஸ்விந்தர் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காகவே இந்த இரண்டு கடன்களையும் வாங்கினார்கள். ஒரு கடனுக்கு ரூ.17 ஆயிரம் ரூபாய் வட்டியும், இன்னொரு கடனுக்கு ரூ.12 ஆயிரம் ரூபாய் வட்டியும் கட்டினார்கள்.

ஜஸ்தீப்புடன் பிறந்த மங்கள், ஜக்தீப் இருவருக்கும் தற்போது வயது 17. இருவருமே 15 வயது ஆனதும் வயலில் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். இந்த ஊரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 7-8 வயது ஆகும்போதே அவர்களை வயலுக்கு இட்டுச் சென்று, தாங்கள் வேலை செய்வதைப் பார்க்க வைப்பார்கள் என்கிறார் இவர்களின் தாய் ராஜ்வீர் கௌர் (38 வயது). “அப்படிச் செய்தால்தான் அவர்கள் உண்மையில் வேலைக்குச் செல்லும்போது கஷ்டமாக இருக்காது,” என்று விளக்குகிறார்.

Rajveer Kaur (in red) says families of farm labourers in the village start taking children to the fields when they are seven or eight years old to watch their parents at work.
PHOTO • Sanskriti Talwar
Jasdeep’s brother Mangal Singh (black turban) started working in the fields when he turned 15
PHOTO • Sanskriti Talwar

இடது:ஊரில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 7-8 வயது ஆகும்போதே அவர்களை வயலுக்கு இட்டுச் சென்று பெற்றோர் வேலை செய்வதைக் காட்டுவார்கள் என்கிறார் ராஜ்வீர் கௌர் (சிவப்பு உடையில்). வலது: ஜஸ்தீப்பின் சகோதரர் மங்கள் சிங் (கருப்பு டர்பன் அணிந்தவர்) தனக்கு 15 வயது ஆனபோதே வயலில் வேலை செய்யத் தொடங்கிவிட்டார்

இந்தக் காட்சி அவர்களது அண்டைவீட்டிலும் நிகழ்வது: நீரு, அவரது மூன்று சகோதரிகள், கைம்பெண்ணான அவர்களது தாய் ஆகியோர் கொண்ட குடும்பம் அது. “என் தாய்க்கு ஹெப்படைட்டிஸ் சி தாக்கியதால் நாற்று நடுவது அவருக்கு சிரமம்,” என்று கூறும் 22-வயது நீரு அதனால்தான் அவரால் ஊரை விட்டு வெளியே வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றும் விவரிக்கிறார். 2022-ம் ஆண்டு ஹெப்படைட்டிஸ் சி தொற்றுக்கு இலக்கான அவரது 40 வயது தாய் சுரீந்தர் கௌர் அதனால், எளிதில் காய்ச்சல், டைபாய்டு, வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கும் தன்மைக்கு ஆனார். அவர் மாதம் ரூ.1,500 கைம்பெண் ஓய்வூதியம் வாங்குகிறார். ஆனால், குடும்பத்தை நடத்த அது போதுமானது அல்ல.

எனவே 15 வயது முதலே நீருவும் அவரது சகோதரிகளும் நாற்று நடுகிறார்கள், களை பறிக்கிறார்கள், பருத்தி எடுக்கிறார்கள். அந்த நிலமற்ற மசாபி சீக்கியக் குடும்பத்துக்கு இதுதான் ஒரே வருவாய். “எங்கள் முழு விடுமுறையும் நிலத்தில் உழைப்பதிலேயே போய்விடுகிறது. ஒரு வார விடுமுறை மட்டுமே எங்களுக்கு மிச்சம் இருக்கும். அதில் நாங்கள் விடுமுறைகால வீட்டுப்பாடங்கள் செய்வோம்,” என்கிறார் நீரு.

நீண்ட, வெப்பமான கோடைகாலத்தில் வேலை செய்யும் சூழ்நிலை மிகவும் கடுமையானதாக இருக்கும். நெல் வயலில் உள்ள தண்ணீரும் வெப்பமாகி, பிற்பகல் நேரத்தில் பெண்களும், சிறுமிகளும் ஓய்வெடுப்பதற்கு நிழலில் ஒதுங்குவார்கள். 4 மணிக்குப் பிறகே மீண்டும் அவர்கள் வேலை செய்யத் தொடங்குவார்கள். மிகவும் கடினமான உடலுழைப்பைக் கோரும் வேலை அது. ஆனால், செய்யவேண்டிய செலவுகள் இருப்பதால், ஜஸ்தீப், நீரு குடும்பத்தவருக்கு வேறு வழியும் இல்லை.

“சம்பாதிப்பதையெல்லாம் அவர்களுக்கு செலவு செய்துவிட்டால், குடும்பத்தை எப்படி நடத்துவது?” என்று கேட்கிறார் ராஜ்வீர். பள்ளிக் கட்டணம், புத்தகம், சீருடை வாங்கும் செலவு ஆகியவற்றைப் பற்றியே அவர் இப்படிக்கூறுகிறார்.

காங்கிரீட் வீட்டின் முற்றத்தில் போடப்பட்ட கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்தபடியே “இரண்டு பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லவேண்டும்,” என்கிறார் அவர். வீட்டில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள லக்கேவாலி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார் ஜக்தீப்.

Jasdeep drinking water to cool down. Working conditions in the hot summer months are hard and the labourers have to take breaks
PHOTO • Sanskriti Talwar
Rajveer drinking water to cool down. Working conditions in the hot summer months are hard and the labourers have to take breaks
PHOTO • Sanskriti Talwar

ஜஸ்தீப் (இடது), ராஜ்வீர் (வலது) இருவரும் தண்ணீர் குடித்து குளிர்ச்சியடைகிறார்கள். கடும் கோடை மாதங்களில் வேலை செய்யும் சூழ்நிலை மிக கடுமையானதாக இருக்கும். தொழிலாளிகள் இடையிடையே ஓய்வெடுக்க வேண்டியிருக்கும்

“ஒரு சிறுமி வேனில் போய் வருவதற்கு மாதம் ரூ.1,200 செலவிடவேண்டும்.வீட்டுப் பாடங்கள் செய்வதற்கு கொஞ்சம் செலவிடவேண்டும். எப்போதும் ஏதோ ஒரு செலவு இருக்கும்,” என்று சலிப்போடு கூறுகிறார் ஜஸ்தீப்.

கோடை விடுமுறை முடிந்து ஜூலை மாதத்தில் மங்களும் ஜக்தீப்பும் பள்ளித் தேர்வு எழுத வேண்டும். விடுமுறை முடியும் தறுவாயில் சில நாட்களுக்கு அவர்கள் படிக்க ஏதுவாக விடுப்பு கொடுக்க குடும்பம் முடிவு செய்திருக்கிறது.

தன்னுடன் பிறந்த இளையவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்பதில் ஜஸ்தீப் நம்பிக்கையோடு இருக்கிறார். ஆனால், ஊரில் உள்ள மற்ற சிறுவர்கள் அனைவரும் அப்படியே படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. “அவர்களுக்கு போராட்டமாக இருக்கிறது. அதனால், கவலை கொள்கிறார்கள்,” என்று கட்டிலில் தன் தாயோடு அமர்ந்தபடி கூறுகிறார் ஜஸ்தீப்.

*****

நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளுக்கு கிடைக்கிற பருவகாலத் தொழில்களில் ஒன்று நாற்று நடுவது. ஒரு ஏக்கர் நடுவதற்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.3,500 தரப்படுகிறது. வயலில் இருந்து நாற்றங்கால் சுமார் 2 கி.மீ. தூரத்தில் இருந்தால், கூடுதலாக 300 ரூபாய் தருவார்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் சேர்ந்து உழைத்தால் ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரையில் கிடைக்கும்.

ஆனால், தற்போது சம்பா பட்டத்தில் வேலைகிடைப்பது அரிதாகி வருகிறது என்று குந்தே ஹலால் கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் தெரிவிக்கின்றன.

Transplanting paddy is one of the few seasonal occupations available to labourers in this village. As they step barefoot into the field to transplant paddy, they leave their slippers at the boundary
PHOTO • Sanskriti Talwar
Transplanting paddy is one of the few seasonal occupations available to labourers in this village. As they step barefoot into the field to transplant paddy, they leave their slippers at the boundary
PHOTO • Sanskriti Talwar

ஊரில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சில பருவகால வேலைகளில் ஒன்று நெல் நாற்று நடுவது ( வலது ) . நெல் நாற்று நடுவதற்காக வெறும் காலோடு அவர்கள் வயலில் இறங்கும்போது தங்கள் செருப்புகளை வரப்பிலேயே விட்டுவிடுகிறார்கள்

Jasdeep’s father Jasvinder Singh loading paddy from the nurseries for transplanting.
PHOTO • Sanskriti Talwar
Each family of farm labourers is paid around Rs. 3,500 for transplanting paddy on an acre of land. They earn an additional Rs. 300 if the nursery is located at a distance of about two kilometres from the field
PHOTO • Sanskriti Talwar

இடது : நாற்றங்காலில் இருந்து நடவுக்காக நாற்றுகளை ஏற்றுகிறார் ஜஸ்தீப்பின் தந்தை ஜஸ்விந்தர். வலது : ஒரு ஏக்கர் நடவு நடுவதற்கு ஒரு விவசாயத் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.3,500 தரப்படுகிறது. நிலத்தில் இருந்து நாற்றங்கால் சுமார் 2 கி.மீ. தொலைவில் இருந்தால் கூடுதலாக ரூ.300 தரப்படும்

இன்னொரு வேலை வாய்ப்பு, குளிர்காலத்தில் பருத்தி எடுப்பது. ஆனால், அது முன்பு இருந்ததைப் போல சாத்தியமான வழியாக இல்லை என்று கூறும் ஜஸ்தீப், “கடந்த பத்தாண்டுகளில் பூச்சித் தாக்குதல், நிலத்தடி நீர் மட்டம் கீழே போவது போன்ற காரணங்களால் பருத்தி சாகுபடி குறைந்துவிட்டது,” என்கிறார்.

வேலை வாய்ப்புகள் அருகிவிட்டதால், விவசாயத் தொழிலாளர்களில் சிலர் வேறு வேலைகளும் செய்கிறார்கள். ஜஸ்தீப்பின் தந்தை ஜஸ்விந்தர் கட்டுமான மேஸ்திரி வேலையும் செய்வார். ஆனால், இடுப்புக்குக் கீழே வலி இருப்பதால் அவர் அந்த வேலையைக் கைவிட்டுவிட்டார். 40 வயதான அவர், 2023 ஜூலை மாதம் மகிந்திரா பொலேரோ கார் வாங்குவதற்காக  ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கினார். இப்போது கிராமத்தில் மக்களை அந்தக் காரில் வைத்து ட்ரிப் அடிக்கிறார் அவர். அதே நேரம் விவசாயத் தொழிலாளியாகவும் வேலை செய்கிறார். அந்த வண்டிக்கு வாங்கியக் கடனை அவர்களது குடும்பம் 5 ஆண்டுகளில் அடைக்கவேண்டும்.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை கோடை விடுமுறைக் காலத்தில் நீருவின் குடும்பம் குறைந்தது 15 ஏக்கர் நிலத்திலாவது நடவு நடும். ஆனால், இந்த ஆண்டு, தங்கள் கால் நடைகளுக்கான தீவனம் வாங்கிக்கொண்டு இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே அவர்கள் நடவு செய்துள்ளார்கள்.

2022-ம் ஆண்டு நீருவின் அக்கா, 25 வயது ஷிகாஷ் ஊரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள தோதா என்ற இடத்தில் மருத்துவப் பரிசோதனைக்கூட உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அவரது மாதச் சம்பளமான ரூ.24 ஆயிரம் அந்தக் குடும்பத்துக்கு ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்தது. அவர்கள் ஒரு பசுவும் எருமையும் வாங்கினார்கள். ஊரில் பயணம் செய்வதற்காக அந்தப்பெண்கள் ஒரு செகண்ட் ஹேண்ட் மோட்டார் சைக்கிளும் வாங்கினார்கள். தன் அக்காவைப் போல பரிசோதனைக்கூட உதவியாளர் ஆவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார் நீரு. ஊரில் உள்ள பொது நல அமைப்பு ஒன்று அவரது பயிற்சிக் கட்டணத்தை செலுத்தியது.

அவர்களது தங்கை, 14 வயது கமல், குடும்ப உறுப்பினர்களோடு வயல் வேலையில் இறங்கிவிட்டார். ஜக்தீப் படிக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் அவர் வயல் வேலையையும், படிக்கும் வேலையையும் மாற்றி மாற்றி செய்துவருகிறார்.

Sukhvinder Kaur and her daughters Neeru and Kamal (left to right)
PHOTO • Sanskriti Talwar
After Neeru’s elder sister Shikhash began working as a medical lab assistant in 2022, the family bought a cow and a buffalo to support their household expenses by selling milk
PHOTO • Sanskriti Talwar

இடது: சுக்வீந்தர் கௌரும், அவரது மகள்கள், நீரு, கமல் ஆகியோரும் (இடமிருந்து வலமாக) இந்த ஆண்டு விவசாயியிடம் இருந்து கால்நடைத் தீவனம் பெற்றுக்கொண்டு இரண்டு ஏக்கர் மட்டும் நெல் நாற்று நடவு செய்திருக்கிறார்கள். வலது: 2022-ம் ஆண்டு நீருவின் அக்கா ஷிகாஷ் மருத்துவப் பரிசோதனைக்கூட உதவியாளராக வேலைக்கு சேர்ந்த பிறகு, அவர்கள் குடும்பம் ஒரு பசுமாட்டையும், ஓர் எருமை மாட்டையும் வாங்கியது. இந்த மாடுகளில் பால் கறந்து விற்று குடும்பச் செலவுகளை சமாளிக்கிறார்கள்

*****

“விவசாயிகள் பெரிய அளவில் நேரடி விதை நடவு முறையை கடைபிடிக்கத் தொடங்கிவிட்டதால், ஊரில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு, இந்தப் பட்டத்தில் 15 நாள் வேலை மட்டுமே உள்ளது,” என்கிறார் பஞ்சாப் கேத் மஸ்தூர் யூனியன் (விவசாயத் தொழிலாளர் சங்கம்) பொதுச் செயலாளரான தர்செம் சிங்.  ஒரு காலத்தில் நடவு நடுவதில் மட்டுமே ரூ. 25 ஆயிரம் வரை தாங்கள் சம்பாதித்ததாக கூறுகிறார்  ஜஸ்தீப்.

ஆனால், “பல விவசாயிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி நேரடி விதை நடவில் ஈடுபடுகிறார்கள். இந்த இயந்திரங்கள் எங்கள் வேலையை இல்லாமல் செய்துவிட்டன,” என்று வேதனை தெரிவிக்கிறார் ஜஸ்தீப்பின் தாய் ராஜ்வீர்.

“இதனால்தான் பல கிராமவாசிகள், நீண்ட தூரத்தில் உள்ள ஊர்களுக்குப் பயணித்து வேலை தேடுகிறார்கள்,” என்கிறார் நீரு. நேரடி விதை நடவு முறையைப் பின்பற்றினால், ஏக்கருக்கு ரூ.1,500 நிதியுதவி தருவதாக அரசாங்கம் அறிவித்த பிறகு, இந்த இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டதாக பல தொழிலாளிகள் கூறுகிறார்கள்.

குந்தே ஹலால் கிராமத்தில் 43 ஏக்கர் நிலம் வைத்துள்ள குர்பிந்தர் சிங் என்ற விவசாயி, கடந்த இரண்டு பட்டங்களாக நேரடி விதைப்பு முறையை பின்பற்றுகிறார். “ஆள் வைத்து நடவு செய்வதிலும், இயந்திரத்தை வைத்து நடுவதிலும் வேறுபாடு ஏதும் இல்லை. இயந்திர நடவால் விவசாயிக்குப் பணம் ஏதும் மிச்சமாவதில்லை. தண்ணீர்தான் மிச்சமாகிறது,” என்கிறார் அவர்.

Gurpinder Singh
PHOTO • Sanskriti Talwar
Gurpinder Singh owns 43 acres of land in Khunde Halal and has been using the DSR method for two years. But he still has to hire farm labourers for tasks such as weeding
PHOTO • Sanskriti Talwar

குந்தே ஹலால் கிராமத்தில் 43 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி குர்பீந்தர் சிங், கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடி விதைப்பு முறையைப் பின்பற்றுகிறார். ஆனால், களையெடுப்பது போன்ற வேலைகளுக்கு அவர் இன்னமும் விவசாயத் தொழிலாளர்களையே நாடுகிறார்

Mangal, Jasdeep and Rajveer transplanting paddy in the fields of upper caste farmers
PHOTO • Sanskriti Talwar
Mangal, Jasdeep and Rajveer transplanting paddy in the fields of upper caste farmers
PHOTO • Sanskriti Talwar

இடது: மங்கள், ஜஸ்தீப், ராஜ்வீர் ஆகியோர் ஆதிக்கசாதி விவசாயிகளின் நிலங்களில் நெல் நாற்று நடுகிறார்கள்

நேரடி விதைப்பு மூலம் தாங்கள் இருமடங்கு விதைகளை நட முடிவதாக கூறுகிறார் அந்த 53 வயது விவசாயி. அதே நேரம் இந்த முறையால் வயல் காய்ந்து கிடப்பதாகவும், அதனால், எளிதாக எலிகள் உள்ளே புகுந்து பயிர்களை நாசம் செய்ய முடிவதாகவும் அவர் ஒப்புக்கொள்கிறார். “நேரடி விதைப்பு முறையில் களைகள் அதிக அளவில் முளைப்பதால், நிறைய களைக் கொல்லி தெளிக்க நேர்கிறது. தொழிலாளிகள் மூலம் நாற்று நடவு செய்தால், களை குறைவாக இருக்கும்,” என்கிறார் அவர்.

எனவே, குர்பீந்தர் போன்ற விவசாயிகள், அந்தக் களைகளை எடுக்க மீண்டும் தொழிலாளர்களையே நாட வேண்டியிருக்கிறது.

“இந்த முறையைப் பின்பற்றுவதால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லாவிட்டால், அவர்கள் ஏன் தொழிலாளர்களை வைத்து இந்த வேலையை செய்யக்கூடாது?” என்று கேட்கிறார் மசாபி சீக்கியரான தார்செம். “தொழிலாளிகளின் வேலையைப் பறித்து பூச்சிக்கொல்லி நிறுவனங்களின் பைகளை நிரப்புவது விவசாயிகளுக்குப் பரவாயில்லை,” என்கிறார் அவர்.

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Sanskriti Talwar

Sanskriti Talwar is an independent journalist based in New Delhi, and a PARI MMF Fellow for 2023.

Other stories by Sanskriti Talwar
Editor : Sarbajaya Bhattacharya

Sarbajaya Bhattacharya is a Senior Assistant Editor at PARI. She is an experienced Bangla translator. Based in Kolkata, she is interested in the history of the city and travel literature.

Other stories by Sarbajaya Bhattacharya
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

Other stories by A.D.Balasubramaniyan