காணொளியில் காண்க: உருளைக்கிழங்கை பற்றிய சிறு பாடல்

"ஆங்கிலம்" என்று வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஒரு சேர சொன்னார்கள். நாங்கள் அவர்களிடம் உங்களுக்கு பிடித்த பாடம் எது என்று தான் கேட்டோம். இந்திய வகுப்பறையில் கேட்கப்பட வேண்டிய புத்திசாலித்தனமான கேள்வி இது அல்ல. முதலில் இரண்டு குழந்தைகள் "ஆங்கிலம்" என்று சொன்னால் மொத்த வகுப்பறையும் அதைத் தான் சொல்லும். முதல் இரண்டு குழந்தைகள் அவர்களது பதிலுக்காக தண்டிக்கப்படவில்லை என்றால் அப்படியே நாமும் செல்வோம் என்று பதில் கூறுவர்.

ஆனால் இது வேறு எந்த இடமும் அல்ல. எடலிபராவில் உள்ள ஒற்றை ஆசிரியர் கொண்ட ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்ட பள்ளி. இது கேரளாவின் தொலைதூர மற்றும் ஒரே பழங்குடி பஞ்சாயத்தான எடமால்குடியில் அமைந்துள்ளது. பள்ளிக்கு வெளியே எங்கும் ஆங்கிலம் பேசுவதை நீங்கள் கேட்க முடியாது. அந்த மொழியில் பலகைகளையோ, சுவரொட்டிகளையோ அல்லது அடையாளக் குறியீடுகளையோ கூட கண்டுபிடிப்பது கடினம். இருப்பினும், அது தான் தங்களுக்கு பிடித்தமான பாடம் என்று குழந்தைகள் கூறுகின்றனர். பல பள்ளிகளை போலவே, இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த பள்ளியிலும் 1 முதல் 4 வகுப்புகளில் வரை உள்ள மாணவர்களை ஒரே அறையில் வைத்து பள்ளி நடைபெறுகிறது. உண்மையிலேயே, ஒரு அற்புதமான ஆசிரியையின் தலைமையில், ஆனால் மிகக் கடுமையான குறைந்த ஊதியம் வழங்கப்படுகின்ற, அதேவேளையில் அதிக வேலைப்பளு, சாத்தியமற்ற நிலைமைகளை எதிர்த்துப் போராடுவது போன்ற சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய மாணவர்களை அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொள்கிறார்.

அதிலும் கூட ஒரு  எதிர்ப்புணர்வு கொண்ட ஒரு குழந்தை இருந்தது. "கணக்கு" என்று அவன் தைரியமாக கூறி முன் வந்தான். உனது கணித திறமையை எங்களுக்கு காட்டு என்று நாங்கள் அவனிடம் கேட்டோம். அவன் தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி 1 முதல் 12 வரை உள்ள வாய்ப்பாட்டை மூச்சு விடாமல் கூறி முடித்தான். கைத்தட்டல்களுக்காக கூட நிற்கவில்லை. அவனை நாங்கள் நிறுத்தச் சொல்லும் போது அவன் இரண்டாவது தடவையாக ஒப்பிக்க ஆரம்பித்துவிட்டான்.

The singing quintet – also clearly the ‘intellectual elite’ of classes 1-4
PHOTO • P. Sainath

பாடும் ஐவர் - 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை உள்ள 'அறிவுசார் உயரடுக்கு' மக்கள் இவர்கள்.

நாங்கள் ஐந்து இளம் சிறுமிகள், ஆசிரியருக்கு அருகில் தனியாக அமர்ந்திருக்கும் மேசைக்கு திரும்பினோம், அவர்கள் தான் இந்த வகுப்புகளில் உள்ள அறிவுசார் உயரடுக்கு மாணவர்கள் என்பது தெளிவாக தெரிந்தது. அவர்களது சிறப்பு இருக்கைக்கான ஏற்பாடே இது எல்லாவற்றையும் நமக்கு கூறியது. அதில் இருந்த மூத்த பெண்ணுக்கு வயது பதினொன்று இருக்கும். மற்றவர்கள் அனைவருக்கும் ஒன்பது வயது அல்லது அதற்கும் குறைவானதாகவே இருக்கும். அந்தப் பையன் தனது வாய் திறமையால் தனக்கு கணிதம் பிடிக்கும் என்பதை நிரூபித்து விட்டான் என்று நாங்கள் சுட்டிக் காண்பித்தோம். இப்போது அவர்களுக்கு ஆங்கிலம் தான் பிடித்த பாடம் என்பதை நிரூபிப்பதற்கான தருணம். சில ஆங்கில உரையாடல்களை கேட்போம் என்று நாங்கள் அந்த சிறுமிகளிடம் கூறினோம்.

தெரியாத மற்றும் விசித்திரமான தோற்றமுடைய எட்டு ஆண்கள் தங்கள் வகுப்பறைக்குள் திடீரென்று வருவதை யாராக இருந்தாலும் எப்படி எதிர்கொள்வார்களோ அப்படி சற்று தயக்கத்துடனே எதிர்கொண்டனர். பின்னர் அவர்களின் ஆசிரியை விஜயலட்சுமி: "அவர்களுக்கு ஒரு பாட்டு பாடுங்கள் குழந்தைகளே", என்றார். அவர்களும் பாடினர். எங்கள் அனைவருக்கும் ஆதிவாசிகள் பாட்டு பாடுவர் என்று தெரியும். முதவன் சமூகத்தைச் சேர்ந்த இந்த ஐந்து சிறுமிகளும் மிக அருமையாக பாடினர். சரியான தாளத்தில் பாடினர். ஒரு வார்த்தை கூட பிசகவில்லை. ஆனால் அவர்கள் இன்னமும் வெட்கப்பட்டனர். வைதேகி என்ற சிறுமி தலையை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவளது ரசிகர்களை பார்ப்பதற்கு பதிலாக அச்சிறுமி மேசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவர்கள் மிகப் பிரமாதமாக பாடினர். பாடல் வரிகள் என்னவோ சுவரில் எழுதப்பட்டு தான் இருந்தது.

அது உருளைக்கிழங்கை சிறப்பிக்கும் ஒரு பாட்டு.

இடுக்கி மலையில் எங்கோ சேனைக்கிழங்கை பயிரிடுகின்றனர் என்று தெரியும். ஆனால், உருளைக்கிழங்கை எடலிபராவிலிருந்து 100 கிலோ மீட்டருக்குள் எங்கும் பயிரிடுவதாக நான் அறிந்த வரை இல்லை.

எப்படியோ - நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் - அந்த பாடல் இப்படியாகத்தான் சென்றது:

உருளைக்கிழங்கே, உருளைக்கிழங்கே
எனது அருமை உருளைக்கிழங்கே
எனக்கும் உருளையை பிடிக்கும்
உனக்கும் உருளையை பிடிக்கும்
நமக்கு உருளையை பிடிக்கும்
உருளைக்கிழங்கே, உருளைக்கிழங்கே, உருளைக்கிழங்கே

அப்பாடல் மிகவும் நேர்த்தியாக பாடப்பட்டது, அவர்கள் சாப்பிட்டு கூட பார்க்காத ஒரு சாதாரண கிழங்கை உயர்த்தியது. (நாங்கள் சொல்வது தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் மூணாறுக்கு அருகில் சில கிராமங்களில் உருளைக்கிழங்கை மக்கள் பயிரிட ஆரம்பித்திருக்கின்றனர். அவை இங்கிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்). ஆனால் அந்த வரிகள் எங்களுடனே தங்கிவிட்டது. பல வாரங்களுக்கு பிறகும் கூட நாங்கள் அதை முணுமுணுத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் அந்தக் கிழங்கை விரும்புவதால் அல்ல, அந்தக் குழந்தைகள் பாடிய விதம் எங்களை மயக்கிவிட்டது, ஆனால் அவர்கள் தீவிரமாக அந்த வரிகளை வெளிப்படுத்தினர். மேலும் அவர்களது முற்றிலும் அழகான பாடும் திறனைக் கண்டும் நாங்கள் மயங்கிவிட்டோம்.

S. Vijaylaxmi – teacher extraordinary
PHOTO • P. Sainath
The students and teacher Vijaylaxmi just outside their single-classroom school
PHOTO • P. Sainath

இடது: ஈடு இணையற்ற ஆசிரியையான விஜயலட்சுமி. வலது: அவர்களது ஒற்றை வகுப்பறை கொண்ட பள்ளிக்கூடத்தின் வெளியே மாணவர்களும் ஆசிரியையும்

மீண்டும் வகுப்பறைக்கு செல்வோம். பல கைதட்டல்களுக்குப் பிறகு வீடியோ கேமராவுக்கு முன்னால் அவர்களை மறுபடியும் பாடும் நாங்கள் வலியுறுத்தினோம், பிறகு சிறுவர்களை நோக்கித் திரும்பினோம். அவர்களை விட சிறுமியர் பிரமாதமாக பாடிவிட்டார்கள். இப்போது அவர்களுக்கான நேரம்.     அவர்களால் அவ்வளவு திறமையாக பாட முடியுமா? அவர்கள் அந்த சவாலை ஏற்றார்கள். அவர்கள் பாடினர் என்பதை விட ஒப்பித்தனர் என்பதே சரியாக இருக்கும். நன்றாகத்தான் இருந்தது என்றாலும் சிறுமிகளுடன் ஒப்பிடுகையில் அது அருகில் கூட வரவில்லை. ஆனால் அவர்களுடைய வார்த்தைகள் மிகவும் வினோதமாக இருந்தது.

அது 'ஒரு மருத்துவரிடம் முறையிடும் பாடல்'. இந்தியாவில் மட்டுமே இப்படிப்பட்ட பாடலை எழுதவும், பாடவும் அல்லது ஒப்பிக்கவும் முடியும். நான் அதன் எல்லா வார்த்தைகளையும் சொல்லி உங்களைக் பாழாக்க விரும்பவில்லை - அல்லது அந்தப் பாடலை இந்த பதிவில் இணைக்க போவதுமில்லை. அது தான் நான் செய்யும் நல்ல காரியமாக இருக்கும். அது தான் அன்சிலா தேவி, உமா தேவி, கல்பனா, வைதேகி மற்றும் ஜாஸ்மின் ஆகிய ஐவருக்கும் நான் செய்யும் கடமையாகும். இருப்பினும் அந்த மருத்துவரிடம் முறையிடும் பாடலில் இந்தியாவிற்கே உரியதான வரிகளாக, "எனக்கு வயிறு வலிக்குது டாக்டர். எனக்குத் தேவை ஆப்பரேஷன் டாக்டர். ஆப்பரேஷன் ஆப்பரேஷன், ஆப்பரேஷன்.

ஆனால் அது தனிப் பாடல். அந்தப் பாடலுக்கான காணொளிக்கு நீங்கள் இன்னொரு நாள் வரை காத்திருக்க வேண்டும்.

இப்போதைக்கு நீங்கள் அந்த உருளைக்கிழங்கு பாடலை  உரித்துப் பாருங்கள்

இந்தக் கட்டுரை முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி அன்று P.Sainath.org இல் வெளிவந்தது

தமிழில்: சோனியா போஸ்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose